Logo_Tamil_big_235x235 இன்றைய தியானம்

அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை


நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. (1 கொரிந்தியர் 13:1-2)

நேற்றைய தியானத்தில், அன்பிலே நாம் வேருன்றி இருப்பதை தேவனாகிய கர்த்தர் நம்மிடத்தில் வாஞ்சையோடு எதிர்பார்ப்பதை குறித்து பார்த்தோம். "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்," (ரோமர் 5:5) என்ற வேத வார்த்தையின் படி தேவ அன்பினால் நிரப்பப்பட நாம் ஊக்கமாய் ஜெபிப்போம். மனிதனின் அன்பு காரண காரியங்களை பொறுத்து இருக்கும், மாறும். ஆனால் தேவ அன்பு என்றென்றும் மாறாத தூய அன்பு. அந்த அன்பு தான் நம்மை இரட்சித்து தேவ பிள்ளைகளாக்கி இருக்கிறது.

இந்நிலையில், நாம் நிறைவேற்ற வேண்டிய தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளை கிழ்க்கண்ட வேத வார்த்தைகள் நமக்கு சொல்கிறது. இந்த வார்த்தைகளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு சொல்லிருக்கிறார்.


இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை.
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. (மத்தேயு 22:37-39)


நாம் இரட்சிக்கப்பட்ட பின், தேவனாகிய கர்த்தருடைய இந்த கற்பனைகளை நிறைவேற்றாமல் நாம் தொடர்ந்து கர்த்தருடைய பிள்ளைகளாக இருக்க இயலாது. நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக முடிவு வரை நிலைத்திருக்க இந்த அன்பே எல்லாவற்றிலும் மிக அவசியமானது. இந்த அன்பு நம்மில் இல்லா விட்டால் "அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்." (1யோவான் 4:8) என்று வேதம் நமக்கு சொல்கிறது.

இந்த நாளின் தியான வசனமாகிய 1 கொரிந்தியர் 13:1-2 -படி, நாம் எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் தேவ அன்பு நமக்குள் இராவிட்டால் நாம் ஒன்றுமில்லை. பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம் இருதயத்தில் ஊற்றப்படும் தேவ அன்பினாலேயே இந்த கற்பனைளை நாம் நிறைவேற்ற முடியும்.

சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். (எபேசியர் 3:19)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print

Joomla SEF URLs by Artio