IST (GMT+5.5)
    Logo_Tamil_big_235x235 இன்றைய தியானம்

    நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக


    நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். (1 யோவான் 4:17)

    பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம் இருதயத்தில் ஊற்றப்படும் தேவ அன்பு நம்மில் பூரணப்பட வேண்டியதாயிருக்கிறது. அதன் பலனைத் தான் மேற்கண்ட இந்த நாளின் தியான வசனத்தில் நாம் பார்க்கிறோம். நம்மில் தேவ அன்பு பூரணப்பட, நியாத்தீர்ப்பின் நாளிலே, நம்மை உண்டாக்கின தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நாம் நிற்க நமக்கு தைரியம் உண்டாகிறது. நாம் நியாத்தீர்ப்பைக் குறித்து நாம் பயந்து கலங்கத் தேவையில்லை.

    மேலும், பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்கு அருளப்படும் ஆவியின் ஒன்பது கனிகளில் அன்பே முதன்மையானது.

    ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.(கலாத்தியர் 5:22-23)

    இந்த ஆவியின் கனியாகிய அன்பு நமக்குள் பூரணப்பட நாம் பரிசுத்த ஆவியானவருக்கு எவ்வளவு தூரம் கீழ்படிந்து, ஒத்துழைப்பு கொடுக்கிறோமோ அவ்வளவாக அன்பு நம்மில் பூரணப்பட ஆரம்பிக்கும். ஆவியின் கனியாகிய இந்த தேவ அன்பு நமக்குள் பூரணப்பட ஆரம்பிக்கும் போது, அது கீழ்க்கண்ட வேத வசனத்தின் படி நற்குணமாக, நீதியாக, உண்மையாக வெளிப்பட ஆரம்பிக்கும்.

    ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். (எபேசியர் 5:9)

    இப்படியாக தேவனுக்கு மகிமை உண்டாக, நாம் கனி கொடுக்கிறவர்களாக முடிவு வரை வாழும் போது நியாத்தீர்ப்பின் நாளிலே நீதியின் சூரியனாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன் நிற்க நமக்கு தைரியம் உண்டாகும். ஏனெனில்,

    அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; ...(1 யோவான் 4:18)

    சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். (எபேசியர் 3:19)


    நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


    Print Email